ஆப்நகரம்

பிரபாகரன் இருக்கிறார் என்பது போலியான நம்பிக்கை - நாம் தமிழர் ரியாக்ஷ்ன்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் கூறியதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Feb 2023, 12:40 pm
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றதாக 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி அறிவித்தது. இருப்பினும், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று ஈழ தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருகிறது.
Samayam Tamil seeman prabhakaran


இந்த நிலையில், இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமாக இருப்பதாக தெரிவித்ததோடு உரிய நேரத்தில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என கூறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ''போலியான நம்பிக்கைகளை விதைப்பது மக்களை மடைமாற்றம் செய்யவே அன்றி, வேறில்லை!'' என்று தெரிவித்துள்ளார். இவர் பழ. நெடுமாறனை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பி அவரை விமர்சித்து வருகின்றனர்.

'பிரபாகரன் வருகிறார்' தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டும் - பழ. நெடுமாறன்

மேலும், பழ. நெடுமாறனின் தகவல் குறித்து இலங்கையின் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். பிரபாகரன் நலமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி போர் இல்லாமலேயே தமிழீழத்தை உருவாக்கக்கூடிய சர்வதேச சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

மேலும், பிரபாகரன் உடல் என்பதை இலங்கை அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. பழ. நெடுமாறன் கூறுவது உண்மையாக இருந்தால் உலக தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று லங்கையின் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறினார்.

அடுத்த செய்தி