ஆப்நகரம்

குமாரு.. யாரு இவரு? ரஜினியை மீண்டும் சீண்டிய சீமான்!

ரஜினிகாந்த் என்ன மத்திய அமைச்சரா என நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 6 Jun 2020, 9:19 am
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Samayam Tamil seeman criticize rajinikanth

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜுன் 1ஆம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை பகிர்ந்தார்.

இந்த பதிவில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி. அன்பழகன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜுன் 3ஆம் தேதி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் இது குறித்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை

அதில், “மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன? அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்? அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா?



தமிழுக்கும், தமிழர்களுக்கும் இன்னல்கள் நேரிட்ட எத்தனையோ பேராபத்துமிக்கச் சூழல்களிலெல்லாம் வாய்திறக்காது மௌனியாய் இருந்த ரஜினிகாந்த் இவ்விவகாரத்தில் கடிதத்தின் மூலம் நன்றி பாராட்டியிருப்பதன் அரசியலென்ன? அவரை மகிழ்விக்கத்தான் இந்நியமனம் நடைபெற்றதா என்ற சந்தேகத்தினை எழுப்பியுள்ள அவர், வெளிப்படைத்தன்மைத் துளியுமின்றி, தனிநபர்களை மகிழ்விக்கப் பரிந்துரைத்த நபரைப் பதவியில் அமர்த்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு?

அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடனான தனது அலுவல் ரீதியான தொடர்புகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நியமிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிவதால் அதில் உண்மை இருப்பின், தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட மத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி