ஆப்நகரம்

ரூபாவை தூண்டிவிட்டு சின்னம்மாவை சீண்டிப் பார்க்கிறார்கள்: நாஞ்சில் சீற்றம்

சிறையில் சிறப்பு வசதிகள் பெறுவதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சீண்டிப்பார்ப்பதாக அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

TNN 13 Jul 2017, 4:33 pm
சிறையில் சிறப்பு வசதிகள் பெறுவதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சீண்டிப்பார்ப்பதாக அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nanjil sampath opposes the allegations against sasikala
ரூபாவை தூண்டிவிட்டு சின்னம்மாவை சீண்டிப் பார்க்கிறார்கள்: நாஞ்சில் சீற்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக பரப்பன அக்ரஹார சிறை அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறைத்துறை டிஐஜி ரூபா, முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துகொடுத்திருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சத்தியநாராயணா, சசிகலாவுக்கு வசதிகள் செய்துகொடுக்க லஞ்சம் பெற்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் டிஐஜி ரூபா உண்மை தெரியாமல் செயல்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரது குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா சாதாரணமாகவே நடத்தப்படுகிறார் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, டிஐஜி ரூபா தனது புகார்களை நிரூபிக்க தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்படுவதாகக் கூறுவது ஆதரமற்றது என்றும் அபத்தமானது என்றும் கூறினார். மேலும், யாரோ டிஐஜி ரூபாவை தூண்டிவிட்டு சீண்டிப்பார்க்கிறார்கள் அவர் குறிப்பிட்டார்.

சசிகலாவுக்கு கிடைத்துள்ள தண்டனை குறித்த சீராய்வு மனுவை அழுக்காக்கும் விதமாக இவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்றும். சிறப்பு வசதிகளை செய்துகொடுப்பதற்கு சசிகலாவே இடம்தர மாட்டார் என்றும் நாஞ்சில் தனது பேட்டியில் பொங்கினார்.

முன்னதாக, சசிகலாவைப் பார்க்க விதிகளை மீறி அதிகளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை டைம்ஸ் நவ் (Times Now) தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி