ஆப்நகரம்

ஐபிஎல் டிக்கெட் கேட்கவா உங்கள ஜெயிக்க வச்சோம்..? எஸ்பி வேலுமணிக்கு எழும் கண்டனங்கள்

சட்டமன்றத்தில் ஐபிஎல் டிக்கெட் கேட்ட முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 11 Apr 2023, 5:27 pm
இந்திய கிரிக்கெட் ஆணையத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் தமிழக ரசிகர்களின் ஆதரவு அளப்பரியது. அதுவும் தமிழக அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், சென்னை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இருப்பினும் இதுகுறித்து பெரிதாக பிரச்சினை எழுவதில்லை.
Samayam Tamil sp velumani


சென்னை சார்பில் கேப்டன் 'தோனி' இருந்தாலே போதும் என்ற நிலை ரசிகர்களிடையே இருப்பதால் மொழி சார்ந்து யாரும் கவலையும் படுவதில்லை. முழுக்க முழுக்க வியாபார நோக்கில் தயார் செய்யப்படும் உணவில் எமோஷன் என்ற உப்பை ரசிகர்கள் சேர்ப்பதால் ஐபிஎல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் கசப்பு தட்டாமல் இருக்கிறது. அதை அப்படியே தக்க வைக்கவே ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்ட வீரரர்களை மட்டுமே கேப்டன் பதவியில் இருந்து நீக்காமலும், பரீட்சியமான வீரர்களை தூக்காமலும் அந்தந்த டீம் உரிமையாளர்கள் பார்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகம்.

உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்க குவியும் ரசிகர்களால் சேப்பாக்கம் பகுதி களை கட்டும். இந்த நிலையில், நாளை (12ம் தேதி) நடக்கவுள்ள CSK-RR அணிகளுக்கிடையேயான போட்டிக்கு ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. ஆனால், வெயிலில் கால்கடுக்க காத்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒதுக்கி மூன்று மடங்கு விலை உயர்ந்து அவர்கள் விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

வெறும் 500 பேருக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு 2000 டிக்கெட் தீர்ந்துவிட்டதாக கவுண்டரில் சொல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வராமல் எதிர்க்கட்சி எம்எல்ஏ எஸ்பி வேலுமணி ஐபிஎல் பார்க்க டிக்கெட் கேட்டது வியப்பை ஏற்படுத்தியுளளது.

தமிழக சட்டசபையில் இன்று விளையாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின்போது ஐபிஎல் போட்டிகளை காண எம்எல்ஏ-க்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டன. இந்த முறை 300 சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாஸ் கூட இன்னும் வரவில்லை. அதற்கு அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களது நெருங்கிய நண்பர் அமீத்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் பிசிசிஐ தலைவராக உள்ளார், அவரிடம் பேசி எங்களுக்கும் டிக்கெட் வாங்கி தாருங்கள். நான்கு ஆண்டுகளாக போட்டிகள் நடக்கவில்லை. நீங்கள் யாருக்கு டிக்கெட் பெற்று தந்தீர்கள் என்று தெரியவில்லை என்று கிண்டலடித்தார். இந்நிலையில், ஐபிஎஸ் டிக்கெட் கேட்கவா தொகுதி மக்கள் உங்கள் சட்டமன்றத்துக்கு அனுப்பினார்கள் என்று எஸ்.பி. வேலுமணியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி