ஆப்நகரம்

என்ஐஏவால் நாகையில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைப்பு

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாகையில் கைது செய்யப்பட்ட இருவர் சென்னையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 14 Jul 2019, 5:57 pm
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்ட நாகையைச் சேர்ந்த இருவரை வருகின்ற 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil Police protest


இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அண்மையில் கேரளா மாநிலம் கொச்சியில் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று சென்னை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட இருவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கூட்டு சதி, அரசுக்கு எதிராக செயல்பட்டது, தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் திரட்டியது, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இருவரையும் வருகின்ற 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டியது. இந்தியாவில் சதித்திட்டம் தீட்ட திட்டமிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி