ஆப்நகரம்

மூத்த தமிழறிஞர் சத்தியசீலன் மறைவுக்கு நிர்மலா சீதாராமன் இரங்கல்..!

தமிழ் இலக்கியப்பேச்சாளர்களில் முதன்மையானவரான சத்தியசீலன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Samayam Tamil 10 Jul 2021, 5:08 pm
மூத்த தமிழறிஞர் சோ.சத்தியசீலன், திருச்சியில் நேற்று நள்ளிரவில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் போன்ற பல விருதுகளை பெற்ற இவர், வானொலி, தொலைக்காட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 10,000 பட்டிமன்றங்களுக்கும் மேல் பேசியுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


மேலும், வள்ளலார் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1933ஆம் ஆண்டு பிறந்த சத்தியசீலன் 89 வயதில் மறைவுற்ற செய்தி தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்பி ஆ. ராசா, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆ. ராசா பதிவு:

இலக்கியப்பேச்சாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பெரம்பலூர் சத்தியசீலன். தலைவர் கலைஞர் அவர்கள் கலைமாமணி விருது வழங்கி இவரை சிறப்பித்துள்ளார். சத்தியசீலனின் மறைவு தமிழ் இலக்கிய ஆன்மீக உலகிற்க்கு பேரிழப்பாகும்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:

பேராசிரியர் சோ.சத்தியசீலன் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மனிதனின் வாழ்வில் குருவின் மகிமையை எடுத்து சொல்லுகையில் அருணகிரிநாதரின் “குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே”வரியை விளக்கியது மனதில் பதிந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த செய்தி