ஆப்நகரம்

தேமுதிக உடன் கூட்டணி பேச்சா? சும்மா நலம் விசாரிக்க போனேன் - எஸ்கேப் ஆன பியூஸ் கோயல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜகவினர் சென்றனர்.

Samayam Tamil 19 Feb 2019, 9:34 pm
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு கட்சிகளும் கூட்டணி உடன்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Piyush Goyal


இதில் பாமகவிற்கு 7, பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்ற உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் சேர தேமுதிக தீவிரம் காட்டி வருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக 7 தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால் 3 தொகுதிகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் சேர தேமுதிக இழுபறியில் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவரது இல்லத்திற்கு சென்றார்.

அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரும் சென்றனர். இந்தச் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், விஜயகாந்த் என்னுடைய பழைய நண்பர். பிரதமர் மோடி, அமித்ஷா சார்பில் விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.

சந்திப்புகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. கூட்டணி மட்டும் முக்கியமல்ல. நட்பும் முக்கியம் என்று தெரிவித்தார். ஆனால் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் உடன், பியூஸ் கோயல் சில நிமிடங்கள் தனியாக பேசியுள்ளார்.

அதில் நிச்சயம் கூட்டணி குறித்து பேசியிருக்க வாய்ப்புண்டு. அதேசமயம் செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டணி குறித்து எதுவும் பேசாததால், தேமுதிக - பாஜக இடையேயான கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி