ஆப்நகரம்

பள்ளி மாணவியின் நேர்மைக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பரிசு !!

பள்ளி வளாகத்தில் கண்டெடுத்த பணத்தை தான் எடுத்துக் கொள்ளாமல், ஆசிரியரிடம் கொடுத்த மாணவியின் நேர்மை குணத்தைப் பாராட்டி, அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் பரிசுப் பொருள்களை அள்ளி வழங்கி கௌரவித்துள்ளார்.

Samayam Tamil 13 Oct 2019, 4:47 pm
சிவகங்கை மாவட்டம் , தேவக்கோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியி்ல் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாலெட்சுமி. இவர் பள்ளி வளாகத்தில் கண்டெடுத்த பணத்தை நேர்மை தவறாமல் வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்த தகவல் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலாக பரவியது.
Samayam Tamil WhatsApp Image 2019-10-12 at 18.02.59.


இத்தகவலை தெரிந்து கொண்ட யோகானந்தன் புத்ரா என்பவர், மாணவியின் நேர்மையை பாராட்டும் விதத்தில், ஜெர்மனியில் இருந்து 70 -க்கும் மேற்பட்ட பென்சில்கள், 30 -க்கும் மேற்பட்ட பேனாக்கள் , கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசுப் பொருள்களை குவியலாக தபால் மூலம் பள்ளிக்கு அனுப்பி இருந்தார்.

இந்த பரிசுப் பொருள்களை, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்தி ராணி மாணவிக்கு வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவர் பேசும்போதும், " நேர்மையாக, உண்மையாக இருங்கள். இளம் வயதில் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்" என அறிவுறுத்தினார்.

ஜெர்மனியில் இருந்து தபாலில் பரிசுகளை அனுப்பியவருக்கு மாணவி மகாலெட்சுமி அன்புடன் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார். மாணவியின் நேர்மை குணத்துக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி