ஆப்நகரம்

ஓபிஎஸ் - சசிகலா கூட்டணி? எடப்பாடியை எதிர்க்க இதுதான் வழி!

எடப்பாடி பழனிசாமியை சமாளிக்க ஓபிஎஸ் தனது அணியை பலமாக்க திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Aug 2022, 8:33 am
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியிருந்து நீக்கியும் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளையும் வழங்கி வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இருப்பினும் நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பக்கமே நிற்பதால் ஓ.பன்னீர் செல்வம் அடுத்தக்கட்டமாக முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார்.
Samayam Tamil o panneerselvam plans to form an alliance with sasikala to oppose edappadi palaniswami sources said
ஓபிஎஸ் - சசிகலா கூட்டணி? எடப்பாடியை எதிர்க்க இதுதான் வழி!


ஆதரவு திரட்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஆகியோரின் பட்டியலை தயாரித்து அவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால், தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

போட்டி பொதுக்குழு!

பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரிய விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரிய போதும் அவரது விருப்பப்படி நீதிபதி மாற்றப்பட்டதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறதாம். அதுமட்டுமல்லாமல் போட்டி பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தி தன் பக்கமும் நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு!

தனியாளாக நின்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்பதை ஓ.பன்னீர் செல்வம் உணர்ந்துள்ளாராம். எனவே சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். சசிகலாவும் அவ்வப்போது ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

எடப்பாடியை எதிர்க்க மூவர் அணி!

தேனி மாவட்டத்துக்கு சென்ற தினகரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சமீபத்தில் வரவேற்பு அளித்தனர். மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதால், விரைவில் அவர்கள் இருவரும் சேர்ந்து கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி