ஆப்நகரம்

நீலகிரி: 6 மாதத்துக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு... மக்கள் மகிழ்ச்சி

வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது.

Samayam Tamil 9 Sep 2020, 3:04 pm
Samayam Tamil ooty botanical gardens opened after 6 months
நீலகிரி: 6 மாதத்துக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு... மக்கள் மகிழ்ச்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த உதகை அரசு தாவரவியல் பூங்கா இன்று திறக்கப்பட்டது. இன்று வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதன் விளைவாக உதகையின் அதிமுக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாவ்ரவியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தளர்வுகளையடுத்து நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழுள்ள பூங்காக்கள் அனைத்தும் இன்று திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா என அனைத்தும் கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு விளம்பர பலகை வைக்கப்பட்டு பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தோட்டக்கலை துறை சார்பில் மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது " உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்கள் உள்ளே நுழைய ஒரு வழியும் ,வெளியேறுவதற்கு இன்னொரு வழியும் தனித்தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது . பூங்காவினுள் நுழைபவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது முக்கியமானதாகும் " என்றார்.

மேலும் கடந்த ஆறு மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து வந்த பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள சிறுகுறு சாலையோர வியாபாரிகள் பூங்கா திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்த செய்தி