ஆப்நகரம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறுத்த கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைக்கு நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்

Samayam Tamil 8 Jun 2020, 9:29 pm
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைக்கு நடத்த கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் - ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் சார்பில் வருகிற 10ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “மருத்துவ நிபுணர்கள், அடுத்த இரண்டு மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் கொரோனா தொற்றின் உண்மை நிலையை மறைத்தும், தரவுகளைத் திரித்தும், அலட்சியமாகவும், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப்பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியும், மதுபானக் கடைகளைத் திறந்தும், கடமை தவறிச் செயல்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்த கட்ட தவறான செய்கையாக, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தியே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறார்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்கள் ''ஆல் பாஸ்''..! அமைச்சரவை அதிரடி முடிவு...

மேலும், இந்த கொரோனா நோய்த் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரையும் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, தேர்வு என்று கட்டாயமாகத் திணித்து, அவர்களை இலட்சக்கணக்கில் வெளியில் வர வைப்பது ஏன்? இவர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதியாக வேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் மாபெரும் கொடுமை. ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார் எனவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாடியுள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வு: தெலங்கானாவிடம் பாடம் படியுங்கள் - ஸ்டாலின் அட்வைஸ்!

இந்தச் சூழலில் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் - ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10.06.2020-ம் நாள் காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும். அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி