ஆப்நகரம்

தனி டிவி சேனல் ஆரம்பிக்கும் ஓபிஎஸ்!

துணை முதல்வர் ஓபிஎஸ் தனக்கு முக்கியத்துவம் தரும் பொருட்டு தனி டிவி சேனல் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 6 Oct 2020, 10:09 pm
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற பல்வேறு திருப்பங்களில் முக்கியமானது, ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பும், சசிகலா குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டதும். அதன்பிறகு, அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த ஜெயா டிவி சசிகலா தரப்பினர் கைவசம் சென்றுவிட்டது. அதன் காரணமாக, அதிமுக மற்றும் அரசு குறித்த செய்திகள் ஜெயா டிவியிலும், நமது எம்எல்ஜிஆர் பத்திரிகைகயிலும் வருவதில்லை.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


எனவே, அதிமுக கட்சி மற்றும் ஆட்சி குறித்த நிகழ்வுகள் மற்றும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அதிமுகவுக்கென்று நியூஸ் ஜே செய்தி சேனலும், நமது அம்மா நாளிதழும் தொடங்கப்பட்டது. புதிய சேனலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக இணைந்து ஆரம்பித்து வைத்தார்கள்.

இருப்பினும், நியூஸ் ஜே சேனல் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர் தொடர்பான செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும், தன்னை முன்னிறுத்தி ப்ரமோட் செய்வதிலும் எடப்பாடி பழனிசாமி கில்லாடியாக இருக்கிறார். வேளாண் பாதுகாப்பு மண்டலம், அரியர் தேர்வு ரத்து உள்பட அதிமுகவின் அனைத்து திட்டங்களிலும் அவரையே முன்னிறுத்தும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான வேலைகளை அவரது ஐடி விங், நியூஸ் ஜே சேனல்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவே அதிமுகவின் அருமருந்து!

ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். அப்போதெல்லாம் கட்சியில் அனைவரையும் ஈபிஎஸ் அரவணைத்து சென்றதாக அதிமுகவினர் கூறுகின்றனர். இதனால், தர்மயுத்தம் காலத்தில் ஓபிஎஸ் பக்கம் இருந்த பெரும்பாலானோர் ஈபிஎஸ் பக்கம் சென்று விட்டனர். இந்த பின்னணியிலேயே அதிமுகவின் செயற்குழு மற்றும் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து, தன்னை முன்னிறுத்தும் பொருட்டு தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலைகளில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அவரை ப்ரமோட் செய்யும் பணிகளில் அவரது மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் இறங்கியுள்ளார். அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் போது ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது உருவம் கொண்ட முகக்கவசங்களுடன் காட்சியளித்து முழக்கங்களை எழுப்பியது. தேனியில் ஒலித்த சென்னையின் ஆதரவுக் குரல்கள் உள்ளிட்டவைகள் ரவீந்திரநாத்தின் ஆலோசனைகளின் பேரிலேயே நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ்க்காக தனி டிவி சேனல் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ஓபிஎஸ்க்கு ஆதரவாக பல்வேறு யூடியூப் சேனல்கள், ஐடி விங்குகள் இயங்கி வரும் நிலையில், சேனல் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னை, மதுரையில் இருந்து செய்தி ஆசிரியர்கள் பலருடனும் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி