ஆப்நகரம்

Outsourcing: மக்களை துன்புறுத்தும் ஆட்சியாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது - ஓபிஎஸ்

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்க கூடாது என்றும் காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியறுத்தியுள்ளார்.

Samayam Tamil 30 May 2023, 1:14 pm
தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்; மாணவ, மாணவியர் அதிருப்தி, நகைக் கடன் வாங்கியோர் அதிருப்தி, கல்விக் கடன் வாங்கியோர் அதிருப்தி, இல்லத்தரசிகள் அதிருப்தி, மின் பயனீட்டாளர்கள் அதிருப்தி, வீடு வைத்திருப்போர் அதிருப்தி, வாடகைதாரர்கள் அதிருப்தி, அரசு ஊழியர்கள் அதிருப்தி, ஆசிரியர்கள் அதிருப்தி, அரசு மருத்துவர்கள் அதிருப்தி,
Samayam Tamil chennai mtc


நுகர்வோர் அதிருப்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அதிருப்தி என ஒட்டுமொத்த தமிழ்நாடே கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அதிருப்தியில் இருக்கின்ற நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழை, எளிய மக்களையும் கடும் அதிருப்திக்கு தி.மு.க. அரசு ஆளாக்கியிருக்கிறது.

தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருதல், பொதுத் துறை நிறுவனங்களில் வெளிமுகமை மூலம் ஆட்களை அமர்த்துதல், குறைந்த சம்பளத்தில் ஆட்களை நியமித்தல் என மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேருந்து போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியாளர்களை வெளிமுகமை மூலம், அதாவது தனியார் ஏஜென்சி மூலம் தி.மு.க. அரசு பணியமர்த்தியுள்ளது தொழிலாளர்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இதிலிருந்து தனியார் மயக்கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளது போன்று, அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலிப் பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர், பணிமனை பணியாளர்களை முறையாக, நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தாமல், தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை தி.மு.க. அரசு நியமித்து இருக்கிறது.

இதனைக் கண்டித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் திடீரென நேற்று மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பயணிகள் தங்கள் இல்லங்களுக்கு வெகுதாமதமாக செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மக்களை துன்புறுத்தும் ஆட்சியை தி.மு.க. அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

பேருந்து போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதற்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தனியார் ஏஜென்சி மூலம் ஆட்களை நியமிப்பதற்கும் தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது அரசுக்கு நன்கு தெரியும். இதனை மீறி, தி.மு.க. அரசு தனியார் ஏஜென்சி மூலம் ஆட்களை நியமித்தது, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. இந்தப் போராட்டத்திற்குக் காரணம் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை.

இதன் விளைவாக பாதிக்கப்பட்டது ஏழை, எளிய, நடுத்தர மக்கள். பொதுவாக, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரமைத்து லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதுதான் ஓர் அரசின் நிர்வாகத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதைச் செய்யாமல், பேருந்து போக்குவரத்தில் தனியாரை அனுமதிப்பது, போக்குவரத்துத் தொழிலாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிப்பது போன்றவை "மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது" என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. வெளிமுகமை மூலம், அதாவது Outsourcing மூலம் ஆட்களை அமர்த்துவது என்பது அரசுத் துறைகள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்களிலும் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்குப் பெயர்தான் சொல்லாததையும் செய்வது என்பது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் சமூக நீதிக்கு எதிரானது.

தனியார் ஏஜென்சி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இதன் மூலம் வரும் வருமானம் யாருக்கு செல்கிறது? போன்ற கேள்விகள் எல்லாம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஒரு குடும்பத்தினுடைய கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பது தொழிலாளர் விரோத நடவடிக்கை என்பதையும், சமூக நீதிக்கு எதிரானது என்பதையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதையும், போக்குவரத்துக் கழகங்கள் அழிந்துவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வர் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி