ஆப்நகரம்

பழனிவேல் தியாகராஜனுக்கு சமமான பதவி: மகேந்திரனுக்கு ஸ்டாலின் கொடுக்க காரணம் என்ன?

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 8 Aug 2021, 4:33 pm
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் மகேந்திரன் அக்கட்சியில் இணைந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


“லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் மகேந்திரன். தேர்தலுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கோவையில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும்” என்று அந்த நிகழ்வில் பேசிய ஸ்டாலின் மகேந்திரனுக்கு புகழாரம் சூடினார்.

மகேந்திரன் திமுகவில் இணைவதற்கு முன்பே அவருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்ற விவாதங்கள் எழத் தொடங்கி விட்டன. அண்மைக்காலமாக மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவுக்கு வருவோருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவை மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை பலப்படுத்தும் பொறுப்பும், தொழில்துறையில் நட்பு வட்டாரத்தை கொண்டுள்ள மகேந்திரனுக்கு அத்துறை சார்ந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதனால், மகேந்திரனுக்கு என்ன பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடந்தது.


இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். திமுகவின் ஐடி விங்கை கட்டி எழுப்பியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. அவரது வழிகாட்டுதல் படியே அந்த அணி செயல்பட்டு வருகிறது.

துரைமுருகன் அறிவிப்பு


ஆனால் நிதி அமைச்சரான பின்பு துறை ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருப்பதால், அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளாதாக சமயம் தமிழில் ஏற்கெனவே “பிடிஆர் பதவியை உருவும் ஸ்டாலின்? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

காவிக் கொடி கட்டத் தயாராகும் மஞ்சள் சட்டை மாஜி அமைச்சர்!
இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பிடிஆர் பெயரளவில் இருந்தாலும், அவர் முழுவதுமாக நிதித்துறையில் கவனம் செலுத்துவார். அதேசமயம், இந்த அணியின் முழுமையான செயல்பாடுகளை இணைச் செயலாளர் மகேந்திரன் கவனித்துக் கொள்வார் என்கிறது திமுக மேல்மட்டத்தில் இருந்து வரும் தகவல்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈழ விடுதலைக்கும், பிரபாகரனுக்கும் திமுக எதிரான கட்சி என்ற தோற்றத்தை சிலரது பதிவுகள் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் உருவாக்கி வந்தன. திமுக உடன்பிறப்புகள் சிலரது சமூகவலைதள செயல்பாடு முகம் சுழிக்கவைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தாத்தா வழியில் பேரன் - உதயநிதி ஸ்டாலின் தரமான சம்பவம்!
கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் பொதுமக்களிடம் எளிதாக சமூக வலைதளம் மூலம் இக்காலகட்டத்தில் சென்றடைந்து விடுகின்றன. சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களே உண்மையென்று நம்பும் மனநிலையில் பொதுமக்கள் பலர் உள்ளனர். இதனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கும், கொள்கைகள், செயல்பாடுகளை பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கும் ஐ.டி.விங்குகள் பெருமளவில் பங்காற்றும் இந்த சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் மகேந்திரன் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி