ஆப்நகரம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு மார்ச் 28-ல் ஓய்வூதியம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு வருகிற 28-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

TNN 22 Mar 2017, 10:25 am
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு வருகிற 28-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
Samayam Tamil pension amount to retired transport employees will be given by 28th march
போக்குவரத்து ஊழியர்களுக்கு மார்ச் 28-ல் ஓய்வூதியம்


தங்களுடைய ஓய்வூதியத்தை தமிழக போக்குவரத்துக் கழகம் முறையாக வழங்க வேண்டும் எனக் கோரி ஓய்வு பெற்ற ஊழியர்களான சரவணன் உள்பட 8 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரனை நேற்று நடைபெற்றது. அப்போது, மனு தாரர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியமானது மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வரும் 28-ம் தேதி வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இதற்காக ஓய்வூதிய நிதி அறக்கட்டளை என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தப்படும். அதேபோல், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பங்காகவும் 12 சதவீதம் அறக்கட்டளையில் செலுத்தப்படும்.

தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் செலுத்திய தொகை ஓய்வூதியப் பலனாக வழங்கப்படும். நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்பட்ட தொகையிலிருந்து மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்தப்படும் முறையாகும்.

இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் பணி ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியமானது, அதன்படி வழங்கப்படாமல் அவ்வப்போது இழுத்தடிக்கப்படுவதுண்டு. அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும்போது வழங்க வேண்டிய பணிக் கொடை, ஓய்வூதிய தொகுப்புத் தொகை என்பன உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களும் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி