ஆப்நகரம்

2000 ரூபாயா.. அதை விடுங்க.. "10 ரூபாய் காயினுக்கு ஒரு வழி சொல்லுங்க".. புலம்பும் மக்கள்..

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில், 10 ரூபாய் நாணயம் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்றே மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 20 May 2023, 12:56 pm
சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், அதை பற்றி வெகுஜன மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாததை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதே சமயத்தில், 2000 ரூபாய் டிரெண்டாவதற்கு பதிலாக 10 ரூபாய் காயின் பற்றிய பேச்சுதான் மக்கள் மத்தியில் காண முடிகிறது.
Samayam Tamil Collage Maker-20-May-2023-12-54-PM-4657


2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற போவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அறிவித்தது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டதுதான் 2000 ரூபாய் நோட்டு. இந்த சூழலில், இந்த ரூபாய் நோட்டுகளும் இனி செல்லாத ஒன்றாக மாறப்போகிறது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் தளத்தில் தான் வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறதே தவிர, பொதுமக்கள் யாரும் இதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், கடந்த 2018-ம் ஆண்டே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திக் கொண்டது.

அதுமட்டுமல்லாமல், ரூ. 2000 நோட்டுகள் விரைவில் திரும்பப்பெறப்படும் என்ற பேச்சும் மக்களிடையே இருந்து வந்தது. இதனால் தங்களிடம் இருக்கும் ரூ. 2000 நோட்டுகளை மக்கள் சில்லறை மாற்றி வைத்துக் கொண்டனர். மேலும் புதிய ரூ.2000 நோட்டுகளை வாங்குவதையும் பலர் நிறுத்திக்கொண்டனர்.

இதனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையோ, பரபரப்பையோ ஏற்படுத்தவில்லை. "இதில் நம்மளுக்கென்ன பிரச்சினை இருக்கப்போகிறது" என்ற மனநிலைதான் பெரும்பாலான மக்களிடம் காண முடிகிறது. கட்டுக்கட்டாக பணம் வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் இந்த அறிவிப்பு ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ரயில் பயணிகளை எரித்த வழக்கில் பகீர் திருப்பம்.. சாட்சி சொல்ல வந்தவரின் தந்தை தற்கொலை.. மர்மம்!
ஆனால், சாமானிய, நடுத்தர மக்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. "2000 ரூபாயை விடுங்க.. 10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா.. அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க ஜி" என்பதுதான் பொதுமக்கள் இடையே காணப்படும் பேச்சாக இருக்கிறது. ஏனெனில், சென்னையை தவிர தமிழ்நாட்டில் வேறு எங்கு போய் நீங்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தாலும் உங்களை வேற்றுக்கிரகவாசிகளை போலவே கடைக்காரர்கள் பார்ப்பார்கள்.

பஸ், ஓட்டல், டீக்கடை, சலூன் கடை என எங்கு சென்றாலும் 10 ரூபாய் நாணயத்தை நாம் கொடுக்க முடியாது. ஏதோ வெளிநாட்டு கரன்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு நம்மிடமே அதை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவர்களை பொறுத்தவரை, 10 ரூபாய் காயின் ஒரு கள்ள நாணயம் அவ்வளவுதான். ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல முறை 10 ரூபாய் நாணயம் செல்லும் எனக் கூறினாலும் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை.

இதனால் சென்னைவாசிகளோ அல்லது இந்தியாவின் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களோ தமிழ்நாட்டில் எங்கேனும் வந்தால், ஒரு அவசரத்துக்கு கூட 10 ரூபாய் நாணயத்தை மாற்ற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 2000 ரூபாய் பஞ்சாயத்தை விட்டுவிட்டு 10 ரூபாய் காயினுக்கு ஒரு வழி சொல்லுங்கள் என மக்கள் புலம்பி வருகின்றனர். இதை மையமாக வைத்து பல மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி