ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 1 Jun 2016, 3:19 pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil petrol diesel hike should be reduced anbumani ramadoss
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.57 உயர்த்தப்பட்டு ரூ.65.04 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.35 உயர்த்தப்பட்டு ரூ.55.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை 5 முறையும், டீசல் விலை 6 முறையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இரு முறை உயர்த்தப்படுவது வாடிக்கையாகி விட்டது.

கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதைத் தடுக்கும் வகையில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட கலால் வரி உயர்வை ரத்து செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி