ஆப்நகரம்

”முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு” : மாறுபட்ட தீர்ப்பை அளித்த நீதிபதிகள்..!

முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு குறித்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

TNN 3 May 2017, 6:11 pm
முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு குறித்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
Samayam Tamil pg medical admission case madras hc delivers split verdict
”முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு” : மாறுபட்ட தீர்ப்பை அளித்த நீதிபதிகள்..!


கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு , மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசால் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகழகங்கள் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்ரமணியம் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். ஆனால் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கில் முடிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ முதுகலை படிப்பு இட ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். ஆனால் மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் அதற்கேற்ப மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுப்ரமணியன் தீர்ப்பளித்தார்.

இரண்டு நீதிபதிகளும் நேர் எதிர் தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி விசாரிக்க இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி இந்திரா பானர்ஜி விசாரிக்க உள்ளார். இவர் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே, மருத்துவ இட ஒதுக்கீடு சர்ச்சையில் இறுதி முடிவு கிடைக்கும்.

PG medical admission case: Madras HC delivers split verdict

அடுத்த செய்தி