ஆப்நகரம்

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!

பிரதமர் மோடி மே 26ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 15 May 2022, 10:47 am
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பிரதமர் மோடி வருகிற 26ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


அதேபோல், தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வருகையின் போது அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exclusive: ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்த ஸ்டாலின் மருமகன், மகள்!
கடைசியாக பிரதமர் மோடியை கடந்த மார்ச் மாதம் டெல்லியில் வைத்து முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, டெல்லி திமுக அலுவலகமான, அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்று திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் ஸ்டாலின் அளித்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையை திமுக அமைக்கிறது. இந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகிற 28ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதற்கிடையே, 26ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக பாஜகவுடன் வெளிப்படையாக மோதல் போக்கு காணப்பட்டாலும், உள்ளுக்குள் திமுகவுடன் இணக்கமான சூழல் நிலவுவதாக கூறப்படும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபப்டுகிறது.

அடுத்த செய்தி