ஆப்நகரம்

இதுவா சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு..? வன்னியர் விஷயத்தில் அன்புமணி ஆவேசம்

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2023, 7:12 pm
அரசு பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிரபடுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீடு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
Samayam Tamil anbumani ramadoss


இந்நிலையில், எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், 68 பிரிவினருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 22 உட்பிரிவுகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு துவங்கி இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில் இந்த சட்டம் எப்படி இயற்றப்படும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்தை தமிழக அரசு வீணடித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணி குற்றசாட்டு

தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது.

வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தரவுகளைத் திரட்டி 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆனால், இன்னும் 10 நாட்களில் கெடு முடியவிருக்கும் நிலையில் ஆணையம் பணியைத் தொடங்கக்கூட இல்லை.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவாறு வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளைத் திரட்ட அதிகபட்சம் ஒரு மாதம் போதுமானது. ஆனால், ஓராண்டாகியும் தரவுகள் திரட்டப்படவில்லை; இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எம்.பி.சி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி