ஆப்நகரம்

தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதுகாப்பு மையங்களை அமைக்கலாம் - சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்களை ஆரம்பிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 10:17 pm
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, '' கொரோனா வைரஸ் தொற்று (Covid-19) உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய தொற்று நோயாகவும் அறிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தினால், அதாவது நாளொன்றுக்கு 2,000 முதல் 2,500 நபர்கள் வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மையங்கள் மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவமனை சிகிச்சை, கோவிட் பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை அல்லது அவர்களின் வீட்டிலோ தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 14 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 11 ஆயிரம் படுக்கைகளுடன் மிகக் குறைந்த தொற்று உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்களை ஆரம்பிக்க பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள் படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகலாம்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி