ஆப்நகரம்

''நாளைக்கு கண்டபடி பேசுவாங்க ரஜினி சார், பேசாம ரெஸ்ட் எடுங்க'' - சீமான் மீண்டும் அட்வைஸ்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் உடல் நலத்துக்கு ஒய்வு பெறுவதே சிறந்தது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 30 Oct 2020, 2:37 pm
தமிழக ஆட்சியின் தலைமையில் வெற்றிடம் உள்ளது என்று ஆரம்பித்து, ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் தேவை, இப்போ இல்லனா எப்போமே இல்லை என்று கூறியதோடு ரஜினியின் அரசியல் பிரவேச அலை அமைதியானது. இருப்பினும், பாஜகவினர் ரஜினியின் அரசியல் வருகையை ஆவலோடு எதிர்பாத்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil seeman rajini


சட்ட சபை தேர்தலுக்கு முன்னரே அவரை பாஜகவில் இணைத்துவிட வியூகங்கள் வகுக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ''தமிழகத்தில் வாழும் உரிமை அனைவர்க்கும் உண்டு, ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது'' என்ற நிலைப்பாட்டோடு அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ரஜினியை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

ரஜினிக்கு தற்போது இருக்கும் செல்வாக்கும், மரியாதையும் அரசியலில் வந்தால் கெட்டுவிடும் என்றும் அரசியல் என்பது வேற உலகம் என்றும் ரஜினிக்கு அட்வைஸ் செய்து வருகிறார். இந்த நிலையில், ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது.

அரசியலா? ஆரோக்கியமா? எது முக்கியம் - ரஜினிக்கு குஷ்புவின் அட்வைஸ்!

அந்த கடிதத்தில், ''அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதம் தான் எழுதவில்லை என விளக்கமளித்த ரஜினி, அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சீமான் மீண்டும் ரஜினியை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். '' ரஜினி, கமலின் அரசியல் நுழைவுக்கு முன்னர் இருந்தே நான் அரசியலில் உள்ளேன். இப்போது ரஜினியை அரசியலில் இழுத்து விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேசுவார்கள். எனவே நடிகர் ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்பதால் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது” என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி