ஆப்நகரம்

ஏசி யூஸ் பண்றீங்களா? எக்ஸ்ட்ரா கரண்ட் அதிக கட்டணம் ? பகல் கொள்ளை - ராமதாஸ் விளாசல்

ஏசி, ஹீட்டர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால் கூடுதல் கட்டணம் விதிக்க மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 30 Apr 2023, 4:24 pm
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி மக்களை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் காலையிலேயே சூரியன் சுட்டெரிப்பதால் வேலைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். பல வீடுகளில் மினிவிசிறியின் காற்றுகூட சூடாக இருப்பதால் ஏசி-யின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
Samayam Tamil eb bill meter


இந்த நிலையில், ஏசி பொருத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளவர்கள் ஏசி கருவிகளை கோடைகாலத்தில் அதிகம் வாங்குவார்கள் என்பதால் மின்சாரவாரியம் அவர்களுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது. அதாவது, ஏசி பயன்படுத்துவோர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் உபயோகித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ்; தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்கு அதிக கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.


வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 கிலோவாட்டாக இருந்து, அதைவிட அதிகமாக 7 கிலோவாட் அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். இரு மாத மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு தண்டமாக பெறப்படும். ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் தண்டம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல்கொள்ளைக்கு இணையானது.

குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கும் கூடுதலாக தண்டம் விதிப்பது நியாயமற்றது. ஏற்கெனவே ரூ.12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக தண்டம் விதித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. எனவே, அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்'' என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி