ஆப்நகரம்

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கொலை

சேலம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் இருந்த இரிடியம் பெட்ரோமேக்ஸ் விளக்கை சிலர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Aug 2016, 9:42 pm
சேலம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் இருந்த இரிடியம் பெட்ரோமேக்ஸ் விளக்கை சிலர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil retired block development officer murdered by burglars in tamil nadu
சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கொலை


மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் கே.சி.நடராஜன் (76). வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தனது மனைவி பழனியம்மாள் (74) உடன் தனியாக வசித்துவந்தார். நடராஜனின் இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொண்டு, சென்னை மற்றும் மேட்டூரில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், நடராஜன் பழைய இரிடியம் பெட்ரோமேக்ஸ் விளக்கு ஒன்றை வைத்திருந்துள்ளார். விலை அதிகமான அந்த விளக்கை விற்பனை செய்ய விரும்புவதாக, தனக்குத் தெரிந்த நபர்களிடமும் நடராஜன் அடிக்கடி கூறிவந்துள்ளார்.

இதன்பேரில் இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த சிலர் பெட்ரோமேக்ஸ் விளக்கை வாங்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். பேரம் பேசிக் கொண்டிருந்தபோதே, திடீரென நடராஜன் மற்றும் அவரது மனைவியை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், இரண்டு பேரையும் வாயை துணியால் அடைத்து, தனித்தனி சேர்களில், தனியறைகளில் கட்டிப்போட்டுவிட்டு, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதில், சில மணிநேரத்தில், நடராஜன் மூச்சடைத்து, உயிரிழந்துவிட்டார். இதுபற்றி தகவல் தெரியவந்ததும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து, பழனியம்மாளை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜன் கொல்லப்பட்டது தொடர்பாக, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரிடியம் பெட்ரோமாக்ஸ் விளக்கு தொடர்பாக, நடராஜன் மீது போலீஸ் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதுதொடர்பாக, விரிவான விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி