ஆப்நகரம்

வறட்சி நிதியாக தமிழகத்துக்கு ரூ.1,000 கோடியை அள்ளிக் கொடுங்க - ஓபிஎஸ் கோரிக்கை!

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று துணை முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 21 Jun 2019, 3:27 pm
மத்தியில் பதவியேற்றுள்ள புதிய அரசு விரைவில் தனது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதையொட்டி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
Samayam Tamil OPS


இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். இவர் நிதியமைச்சராக பதவியேற்ற பின், நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. வரலாறு காணாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மட்டுமே தற்போது நம்பியுள்ளோம்.

எனவே குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ரூ.1000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும். முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்திற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது. அதேபோல் தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் பல்வேறு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.6000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கி வரும் ரூ.1.20 லட்சம் கோடியை, ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும். ஆனைகட்டி திட்டத்திற்கு ரூ.17,600 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் தமிழகத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும். இதேபோல் கிருஷ்ணா - கோதாவரி - காவிரி இணைப்பு திட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, முன்னுரிமை அளித்து செயல்பட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது உண்மை.

ஆனால் அதற்காக தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுவது தவறானது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்த செய்தி