ஆப்நகரம்

ஸ்பைடர் மேன், பேட் மேன் தெரியும்...சாக்கு மேன் தெரியுமா?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான குலதெய்வ வழிபாடுகளும், நேர்த்திக்கடன்களும் உள்ளன. அப்படி ஒரு வித்தியாசமான நேர்த்திக்கடன் தான், இந்த அழகுவள்ளி அம்மன் ஆலயத்திலும் இருக்கிறது.

Samayam Tamil 20 Sep 2019, 12:02 pm
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான குலதெய்வ வழிபாடுகளும், நேர்த்திக்கடன்களும் உள்ளன. அப்படி ஒரு வித்தியாசமான நேர்த்திக்கடன் தான், இந்த அழகுவள்ளி அம்மன் ஆலயத்திலும் இருக்கிறது.
Samayam Tamil WhatsApp Image 2019-09-20 at 11.25.35.


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது செங்கப்படை கிராமம். இந்த ஊரின் காவல் தெய்வம்தான் அழகுவள்ளியம்மன். ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.

அழகுவள்ளியம்மன், கேட்டதை தரும் சக்தி கொண்ட தெய்வம் என நம்பப்படுவதால், இந்த ஊர்க்காரர்கள் வெளியூரில் வசித்தால் கூட இந்த திருவிழாவின்போது வந்து விடுகிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக…
அப்படி என்ன நேர்த்திக்கடன் ?

சாக்கு மனிதர் வேடம் போட்டு மக்கள் மத்தியில் நகர்வலம் வருவதுதான் இந்த வித்தியாசமான வேண்டுதல்.முழுக்க முழுக்க வைக்கோல் பொதிக்கப்ப்ட்ட சாக்கு மனிதனாக வேடமிட்டுக்கொண்டு வேண்டினால், பில்லி சூனிய கவலைகள் தீருமென்பது நம்பிக்கையாம்.

எப்படி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்?
சாக்கு மனிதன் வேடம் போடுபவர்கள் 10 நாட்களாக கடும் விரதமிருந்து, விழா அன்று காலை 9 மணியளவில் ஊரின் கண்மாய்கரை அருகே உள்ள பெருமாள் கோவில் திடலில் கூடுகின்றனர். சாக்குகளை பேண்ட் மற்றும் சட்டை மாதிரி தைத்து, அதை அணிந்த பின் வைக்கோலை இடம் விடாதபடி சாக்கினுள் திணிக்கின்றனர். சில நேரங்களில் வைக்கோலை கம்பு கொண்டு குத்தி திணித்து சாதாரமான மனிதரை கனமான மனிதர் போல மாற்றும் வரை வைக்கோலை வைத்து திணித்து முழுவதுமாக ஊசி மூலம் தைத்து விடுகின்றனர்.

பின்னர் முகத்தையும் சாக்கு கொண்டு மூடி சாக்கு மனிதர்களாகவே மாற்றி விடுகின்றனர். ஒரு சாக்கு மனிதரை தயார் செய்ய சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்படும். சுமார் 10 மணியளவில் தயாராகும் சாக்கு மனிதர்கள் மதியம் 3 மணி வரை பெருமாள் கோவில் திடலிலேயே காத்து கிடக்கின்றனர். சாக்கு மற்றும் வைக்கோல் கனத்துடன் மேளதாளங்களுடன் கிராமத்தைச் சுற்றி வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், சாக்கு வேடம் அணிந்தவர்களை தாரை தப்பட்டைகளோடு அழைத்துச் செல்கிறது. இளைஞர்கள் மற்றும் சாக்கு வேடம் அணிந்தவர்கள் நடனமாடியபடியே முளைப்பாரி இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர்.


முளைப்பாரி அங்கிருந்து கிளம்பிய இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகுவள்ளியம்மன் கோவில் வரை சாக்கு வேடம் அணிந்தவர்கள் சிலம்பாட்டம் மற்றும் நடனம் ஆடிக்கொண்டே முளைப்பாரிக்கு முன்னே செல்கின்றனர். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை சிரத்தையுடன் செய்து முடிக்கின்றனர். இதன்மூலம் தாங்கள் பில்லி சூனிய பிரச்சினைகளிலிருந்து காக்கப்படுவோம் என்று அந்த மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி