ஆப்நகரம்

சேலம் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தவில்லை; ஆதாரம் இருக்கிறது - அரசு மருத்துவமனை டீன்!

சேலம்: கர்ப்பிணி பெண்ணும் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தவில்லை என்று மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Jan 2019, 12:14 pm
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள குதிரைகாரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராமு, ராணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 2014ல், கர்ப்பிணியாக இருந்த ராணி, மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக சென்றார். அப்போது, அவருக்கு ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி, மருத்துவர்கள் ரத்தம் ஏற்றி உள்ளனர்.
Samayam Tamil HIV Blood


அதன்பின் சில நாட்களில் உடலில் அரிப்பு உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மருத்துவர்களிடம் முறையிட்ட போது, புது ரத்தம் ஏற்றினால் அதுபோல பாதிப்புகள் வருவது சகஜம் என கூறி உள்ளனர். பின்னர், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 2015ல் மீண்டும் கர்ப்பமடைந்த ராணி, மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர்கள் ராமுவை அழைத்து, மருத்துவ பரிசோதனை செய்தனர். அவருக்கு எச்ஐவி பாதிப்பு இல்லாதது தெரியவந்தது. இதனால், கடந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் ஏற்றியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களே பொறுப்பு என்று குற்றம்சாட்டினர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், இதனை வெளியில் கூறினால் உங்களுக்குத்தான் அவமானம். உங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று அச்சுறுத்தி உள்ளனர்.

பின்னர், மாதந்தோறும் அரசு வழங்கும் ₹1,000 உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, 2வது குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு இல்லாமல் பிறந்தது. அதன் பிறகு மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, ராணி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சேலம் மேச்சேரி அருகே குதிரைக்காரன்புதூர் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தவில்லை என்று சேலம் அரசு மருத்துவமனை டீன் ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் தானம் செய்தவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பில்லை. சுத்தமான ரத்தம் தான் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. தானமாக பெறப்பட்ட ரத்தம் தொற்று இல்லாதது என்பதற்கான ஆதாரம் உள்ளதாக டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி