ஆப்நகரம்

சாத்தான்குளம்: ஜெயராஜ் மகளுக்கு வருவாய்த் துறையில் பணி!

சாத்தான் குளம் இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 12:07 pm
சாத்தான்குளம் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil sathankulam murder case


பாதிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சார்பாகவும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்டபோதே நிவாரணத் தொகை அறிவித்ததோடு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ் மகள் பெர்ஸிக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். பெர்ஸிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்திற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு!

அந்த ஆணையில், ‘சாத்தான்குளம் காவல்துறையினருடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்துவிட்டனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையினர் மிகக் கொடூரமாகத் தாக்கி இருவரும் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் காவல்துறையினருடன் ஏற்பட்ட பிரச்சினை என, முதல்வர் கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்தப் பிரச்சினை வெளிவந்த உடனே மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடைகளில் இன்று முதல், கட்டணமில்லா மாஸ்க் விநியோகம்!

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெர்ஸி, “என் தந்தையும், தம்பியும் இறந்ததால் ஏற்பட்டுள்ள வேதனையிலிருந்து மீண்டுவருவதற்காக தமிழ்நாடு அரசு இந்த பணி ஆணையை வழங்கியுள்ளது. நேர்மையான விசாரணை மூலம் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்த தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஊடங்கங்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி