ஆப்நகரம்

திமுகவை விட்டுட்டு வெளியே வாங்க.. திருமா மீது கடுப்பான சவுக்கு சங்கர்..!

எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருப்பதை சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2023, 7:33 pm
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடருவார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அதிமுகவினரிடையே பெரு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக வினர் கொண்டாடினர். தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியது; உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன். அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் B டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யாரு வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என்று ஈபிஎஸ் இவ்வாறு கூறியிருந்தார்.
Samayam Tamil tiruma


இதற்கு எதிர்வினையாற்றிய டிடிவி தினகரன், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றிதான். இரட்டை இலை அவரிடம் சென்றால், அது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும். தர்ம யுத்தம் ஒன்றில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தர்ம யுத்தம் இரண்டில் அவருக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு 5000 வாக்குகள் அதிகமாகுமே தவிர, வெற்றி கிட்டாது. 2017 ஏப்ரலிலிருந்தே பாஜகதான், அதிமுகவை இயக்குகிறது என்று விமர்சித்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்தவர்களும் கூட்டணியில் உள்ளவர்களும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் எழுப்பாத நிலையில் எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திருமா வாழ்த்து

அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே'' என்று திருமா தெரிவித்துளளார்.

சனாதனம்

பாஜக பெயரில் சனாதனமும், இந்துத்துவா கொள்கையும் தமிழகத்தில் வளரக்கூடாது என்றால் வலுவான கட்சியுடன் கூட்டணி அமைப்பது தேவை என்ற கணக்கில் திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்துள்ளது. இதுகுறித்து பலதடவை பேசியுள்ள திருமாவளவன், கூட்டணியில் இருந்து பாஜகவை விடுவித்துவிட்டால் அதிமுக மீண்டெழ வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும், திமுக கூட்டணியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் விமர்சித்தது இல்லை. இந்த நிலையில், திருமாவளவனை அரசியல் முன்மாதிரியாக பேசும் சவுக்கு சங்கர் எடப்பாடி பழனிசாமி விவாகரத்தில் திருமாவை விமர்சித்து ட்வீட் போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் ட்வீட்

உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 'பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே'' என்று தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி விடக்கூடாதென்பதை தான் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்கு கமெண்ட் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர் ''அவரு பாஜகவை கழட்டி விட்டா நீங்க திமுகவை கழட்டி விட்டுட்டு வாங்க'' என்று கூறியுள்ளார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் சவுக்கு சங்கர், பாஜகவை திமுக எதிர்ப்பதை போல காட்டிக்கொள்வதாகவும், அவர்களுக்குள் மறைமுக டீலிங் உள்ளது எனவும் குற்றசாட்டு வைத்து வருகிறார். எனவே, திமுக ஒரு பாஜக எதிர்ப்பாளி என்று நம்பிக்கொண்டிருக்காமல் நீங்களும் அந்த கட்சியை விட்டு வாருங்கள் என்று சவுக்கு சங்கர் சாடியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி