ஆப்நகரம்

டிடிவி தினகரனை அசிங்கப்படுத்திய ஆடியோ- தங்க தமிழ்ச்செல்வன் மன மாற்றத்திற்கு இதுதான் காரணமா!

அமமுக பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரனை கேவலமாக திட்டிய தங்க தமிழ்ச்செல்வனின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று இங்கே ஆராயலாம்.

Samayam Tamil 25 Jun 2019, 5:49 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலாவின் விஸ்வரூபத்தால் வெளியே வந்தவர் டிடிவி தினகரன். அதிமுகவிற்கு தலைமையேற்று ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கையில், சொத்து குவிப்பு வழக்கு சசிகலாவிற்கு அதிர்ச்சி அளித்தது.
Samayam Tamil Thanga-Tamilselvan


இதையடுத்து டிடிவி தினகரனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சிறைக்குச் சென்றார். அதன்பிறகு தான் ஆட்டம் ஆரம்பித்தது. ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் அணி இணையும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது சசிகலாவின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டனர்.

இதன் காரணமாக பிரிந்து வந்த டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது முதல் டிடிவி உடன் நிழல் போலத் தொடர்ந்து வந்தார்.

சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. அப்போது முதல் தங்க தமிழ்ச்செல்வன் மிகுந்த அப்செட்டில் இருந்துள்ளார். தனது கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போனது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அமமுகவில் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் தொடர்ச்சியாக வீட்டிலும் பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன.

அதிமுகவில் இருந்து இதற்காகவா வந்தீர்கள்? அங்கேயே எம்.எல்.ஏவாக இருந்திருக்கலாம். கையில் பணமாவது இருந்திருக்கும். இப்போது பதவியும் இல்லை. பணமும் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் மனைவி கூறியுள்ளார்.

இது நீண்ட நாட்களாக அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இனியும் தாமதித்தால் குடும்பத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று கருதியுள்ளார். இதன் அதிரடியாகத் தான் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் மிக கேவலமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

தற்போது மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்கிறார். ஆனால் மறுபுறம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முட்டுக் கட்டை போடுகிறார்.

எனவே தங்க தமிழ்ச்செல்வனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி