ஆப்நகரம்

இலவச வீட்டுக்கு 5 லட்ச ரூபாய் கட்டாய நிதியா? - சீமான் சரமாரி கேள்வி

நொச்சிக்குப்பம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன் என்று நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2023, 5:48 pm
நொச்சிக்குப்பம் பகுதி அல்லாத, பிற பகுதி மக்களுக்கும் அவ்வீடுகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது நொச்சிக்குப்பம் பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
Samayam Tamil seeman


சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி, அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நொச்சிக்குப்பம் திட்டப்பகுதி என்ற பெயரில் அங்கு வாழும் அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் கட்டித்தரப்படும் என்றுகூறி, கடந்த 1972 ஆம் ஆண்டு மீனவ மக்களது நிலங்கள் அரசால் கைப்பற்றப்பட்டன. அதன்பின், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வீடுகளைப் புதுப்பித்து கட்டித்தருவதாகக் கூறி மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்திய தமிழ்நாடு அரசு, ஒரு தலைமுறையைக் கடந்து விரிவடைந்துள்ள மீனவ மக்களின் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகளை வழங்காமல், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வீடுகள் வழங்க முன்வந்துள்ளது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மேலும், நொச்சிக்குப்பம் பகுதி அல்லாத, பிற பகுதி மக்களுக்கும் அவ்வீடுகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது நொச்சிக்குப்பம் பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, தங்களுக்கு உரிமையான வீட்டினை பெறுவதற்கு, வீடு ஒன்றிற்கு 5,29,000 ரூபாய் வழங்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அம்மக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வசூலிப்பதென்பது அப்பட்டமான பகற்கொள்ளையாகும்.

இந்திய ஒன்றிய அரசின் நிதி உதவியுடனும், தமிழ்நாடு அரசின் பங்களிப்புடனும் ஏழை மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு 5 லட்ச ரூபாய் அளவிற்குக் கட்டாய நிதிப்பெறப்படுவது ஏன்? இலவச வீடு வழங்கும் திட்டம் என்று கூறிவிட்டு, லட்சக்கணக்கில் நிதி வசூலிப்பதற்குப் பெயர்தான் திமுக அரசின் ‘திராவிட மாடலா’?. மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு வீடு வழங்க திமுக அரசு மறுப்பது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமத்துவமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, நொச்சிக்குப்பம் பகுதியில் விரிவடைந்துள்ள அனைத்து மீனவ குடும்பங்களுக்கும், அனைத்து வாரிசுகளுக்கும், எவ்வித கட்டாய நிதியும் பெறப்படாமல் போதிய அளவில் வீடுகள் வழங்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

அடுத்த செய்தி