ஆப்நகரம்

“சசிகலா வருகை, ஆகஸ்ட்டில் அரசியல் மாற்றம் நிகழும்”

ஆகஸ்ட் 15ஆம் தேதி சசிகலா வெளியே வர வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது...

Samayam Tamil 9 Jul 2020, 5:48 pm
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி ஆன முன்னால் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
Samayam Tamil “சசிகலா வருகை, ஆகஸ்ட்டில் அரசியல் மாற்றம் நிகழும்”
“சசிகலா வருகை, ஆகஸ்ட்டில் அரசியல் மாற்றம் நிகழும்”


இந்த தீர்ப்பு வெளியானபோது ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து சசிகலா உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போதைய நேரத்தில் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் எனக் கட்சியில் தனது ஆதரவாளர்களைக் கூட்டிக் கொண்டு தனி அணியாகச் செயல்படத் தொடங்கினார்.

தர்ம யுத்தத்திற்கு முக்கிய காரணமாக முதல்வர் பதவி பறிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய பன்னீர் செல்வம் சசிகலா தரப்பினர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் எனப் போராட்டம் தொடங்க, மறுபக்கம் சசிகலா காலில் விழுந்து ஆசி பெற்று பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற சில நாளில் நீதிமன்ற வழங்கிய தண்டனையை ஏற்று சசிகலா சிறைக்குச் சென்றார். அவர் சிறைக்குச் சென்றவுடன் அதிமுகவில் யார் அதிகாரத்தைச் செலுத்துவது எனப் பிரச்சினை வெடித்தது. இந்த பிரச்சினை காரணமாகக் கட்சியிலிருக்கும் பெரும்பாலோனோர் ஒன்றுகூடி சசிகலா அக்கா மகன் தினகரனைக் கட்சியிலிருந்து நீக்கினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு சிவில் எஞ்சினியர் தேவையில்லை: ஆர்.பி.உதயகுமார்

இந்த பிளவு ஏற்பட்டபின் சில காலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பலர் படிப்படியாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சென்றுவிட்டனர். இதற்கிடையே தினகரன் வெளியேற்றப்பட்டவுடன் அதிமுகவிற்கு மீண்டும் திரும்பிய பன்னீர் செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

மூன்றரை ஆண்டுகளா தமிழ்நாட்டில் நடந்து வந்த இந்த அரசியல் சுவாரஸ்யங்களின் அடுத்தகட்டமாக, ஆட்சியில் உள்ள அதிமுக அரசின் பதவிக் காலம் இறுதி ஆண்டில் பயணித்து வருகிறது. இதனால், 2021 சட்டசபைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என அதிமுகவினர் கணக்குகளைப் போடத் தொடங்கிவிட்டனர்.

இந்த சூழலில்தான் சசிகலா ஆகஸ்ட் மாதம் வெளியாகிறார் என்ற செய்தி பாஜக தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. கர்நாடகா பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் சசிகலா விடுதலை குறித்துக் குறிப்பிடுகையில், “ஆகஸ்ட் 15ஆம் தேதி நிச்சயம் வெளியாவார்” என்கின்றனர்.

இதுகுறித்து சசிகலா அடைக்கப்பட்டுள்ள அக்ரஹாரா சிறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நன்னடத்தை காரணமாகத் தண்டனையைக் குறைத்தால் வருடத்திற்கு 60 நாட்கள் என 4 வருடத்திற்கு 240 நாட்களைத் தண்டனை காலத்திலிருந்து விலக்கு பெறலாம். அப்படிச் செய்தால் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது” என அதிகாரிகள் கூறினர்.

அதிமுகவினரிடம் சசிகலா விடுதலை தகவல் குறித்து விசாரித்தபோது, “ஆம் உண்மைதான். இப்போது அது தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாஜக ஆதரவோடு சசிகலா வெளியாவார் என எதிர்பார்க்கிறோம். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் இனி அதிமுகவிற்கு உடன்பாடில்லை. எனினும், ஆகஸ்ட் மாதம் சசிகலா வெளியாகிவிடுவார் என நம்புகிறோம். அதே வேளையில் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்” என அடுக்கிக் கொண்டே சென்றார்.

எப்படி இருந்த கர்நாடகா இப்படி ஆயிடுச்சே; அப்படி என்ன தான் நடந்தது?

குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் தினகரனும் கட்சியில் சேர்ந்துவிடுவார் என்றும் இந்த மாற்றங்கள் அனைத்தும் சசிகலா வருகையின் மூலம் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நகர்வுகளுக்கு பாஜகவே முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்களைக் கூறிய அதிமுக புள்ளி தனது பெயரை வெளியிட மறுப்பு தெரிவித்துவிட்டார். மறுபக்கம் சசிகலாவும் தனது தரப்பில் தினகரன் அரசியல் நகர்வுகள் உள்படத் தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து அனைத்து தகவல்களையும் அறிந்து வருகிறாராம். சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அதிமுக அதிகாரத்தைக் கைப்பற்றி திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார் எனக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல்களுக்கு இடையே எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தியே இந்த சசிகலா விடுதலை உள்ளிட்டவை திட்டமிடப்படுவதாக நமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி