ஆப்நகரம்

கொட்டப் போகும் பருவமழை- தீரப் போகும் தண்ணீர் பிரச்னை; 2 நாளில் தமிழகத்திற்கு நல்ல செய்தி!

அடுத்த சில நாட்களில் பருவமழை தொடங்கும் என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jun 2019, 8:59 am
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலைமோதிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.
Samayam Tamil TN Rains


பல இடங்களில் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கு குறைந்தபட்ச தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆழத்திற்கு சென்றுவிட்டது.

இதனால் அதனை நம்பியிருக்கும் கூட்டமும் திக்கு தெரியாமல் நிற்கின்றது. போதிய பருவமழை கிடைக்கவில்லை என்று இயற்கையின் மீது பழி போட்டாலும், கிடைக்கும் மழை நீரை எப்படி சேமிக்கிறீர்கள் என்ற கேள்வி நம்மீது எழுகிறது.

தமிழகத்தில் எந்தவொரு இல்லத்திலும் மழைநீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் இல்லை. இந்த விஷயத்தில் அரசும் தீவிரம் காட்டவில்லை. இதன் விளைவு தற்போது தண்ணீரின்றி பெரும் சிரமப்பட்டு வருகிறோம்.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், சற்று ஆறுதல் தரும் விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இவர், தமிழக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

நம்பிக்கை இழக்காதீர்கள். இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கேரள மாநிலத்தில் அதிகளவில் மழை பொழியும். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.

இதனால் சிறுவாணி நீர்மட்டம் உயர்ந்து, வேளாண்மை செழிக்கும். சமீப காலமாக வேளாண் துறை படிப்புகளின் மீது இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது சிறப்பான வருங்காலத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி