ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

TOI Contributor 23 Jan 2017, 6:11 pm
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
Samayam Tamil special tamil nadu assembly passed jallikattu ordinance as permanent act
ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்


தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன் வடிவை சட்டமாக நிறைவேற்றுவதற்காக, இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் அவசரச் சட்டத்தின் முன் வடிவு நகலை தாக்கல் செய்தார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யும் தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் முன் வடிவு நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டுக்காக விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், விலங்குகள் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் அதிகாரபூர்வமாக நீக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த சட்ட முன் வடிவை வரவேற்றுள்ளன. முதல்வர் பன்னீர் செல்வம் இந்த சட்ட முன் வடிவு குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துப் பேசினர். கடந்த 2014ல் அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட போது இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்காததால் நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வர் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி ஆகியோர் இந்த சட்ட முன் வடிவை வரவேற்று பேசினார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த சட்ட முன் வடிவு சட்டமாக நிறைவேறியது.

இந்தக் கூட்டத்தை சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களும் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுமான ஹிப் ஹாப் ஆதி, காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயா சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் டாக்டர். ராஜசேகரன் ஆகியோர் அமர்ந்து பார்த்தனர்.

அடுத்த செய்தி