ஆப்நகரம்

சென்னை: 'வேலையிழந்த 12 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள்'... மாநகராட்சிக்கு கடிதம்

12 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பெருநகர ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2021, 4:27 pm
சென்னை மாநகரில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மாநகர ஆணையர் பிரகாஷுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil file pic


அதுதொடர்பான கடிதத்தில் கூறியுள்ளதாவது, '' கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக NULM திட்டத்தின் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று 12.1.2021 அன்று பணிநீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

இந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீனப்பிரதமர் வருகை, வர்தா, நிவர் ஆகிய புயல்கள் மற்றும் "கொரோனா" பேரிடர் போன்ற பல்வேறு நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் தூய்மைப் பணியாற்றியவர்கள். அது மட்டுமின்றி இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்ட வர விரும்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமி ஏன் டெல்லி சென்றார் தெரியுமா? போட்டு உடைத்த ஸ்டாலின்!

இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது பணி நீக்கம் செய்திருப்பது நல்ல நிர்வாக நடைமுறை அல்ல என்று தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் - இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் திறம்பட ஆற்றிய பணி கருதி 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்திடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உயர்நீதிமன்ற வழக்கின் முடிவிற்காக காத்திராமல் - இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி