ஆப்நகரம்

தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் மறைவு: ஸ்டாலின், ஓபிஎஸ் இரங்கல்!

தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Samayam Tamil 4 Oct 2020, 10:45 pm
முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியன் மனைவியும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்தில் நாளை மாலை 4 மணிக்கு மணிக்கு நடைபெறுகிறது.
Samayam Tamil தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன்


ராஜாமணியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், “ராஜாமணியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி பேரணி!

மேலும் ஸ்டாலின் இரங்கல் செய்தியில், “மறைந்த தங்கபாண்டியனுக்கு கழகப் பணியிலும், அவரது பொதுப்பணியிலும் உற்ற துணையாகவும் - உறுதிமிக்க இல்லத்தரசியாகவும் விளங்கியவர். நான் விருதுநகர் மாவட்டத்திற்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் அவரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளேன். அவரும் பெற்ற அன்னையைப் போன்று என் மீது பாசமழை பொழிந்து, நலம் விசாரித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் அன்பின் இமயமாகத் திகழ்ந்தவர்.


இன்று கழகப் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வளர்த்தெடுத்து ஆளாக்கி ஒருவர் சட்டமன்றத்திலும், இன்னொருவர் நாடாளுமன்றத்திலும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுக்க முழுக்க திருமதி. ராஜாமணி தங்கபாண்டியனையே சாரும். அவரது மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தங்கம் தென்னரசுக்கும், அன்புச் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி