ஆப்நகரம்

கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு மும்பையில் எக்ஸாம் நடத்துவதா? - எம்பி சு.வெங்கடேசன்

கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்குமாறு எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 3 Jan 2021, 8:03 pm
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனுங்களுக்கான தேர்வு மையத்தை சென்னையிலும் அமைக்ககோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil file pic


அந்த கடிதத்தில், '' பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை எண் 1/2020 ல் Stipendiary Trainees Categories I, II & Category II (C) ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் இருப்பவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பை அளிக்கிறது. இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

இந்த பணி நியமன அறிவிக்கையில் செய்யப்பட்டுள்ள பிரகடனம் மகிழ்ச்சி அளிப்பதாகும். "பாலின நிகர் நிலையைப் பிரதிபலிக்கிற ஊழியர் உள்ளடக்கத்தை உருவாக்க அரசு முனைப்போடு இருக்கிறது; பெண் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்" என அது கூறுகிறது.

'திமுக ஆட்சியில் 200 நாள் வேலைத்திட்டம், தடையில்லா உதவித்தொகை' - துரைமுருகன்

மேலும் வயது வரம்பில் சலுகைகள் "கைம்பெண்கள், மண முறிவு பெற்ற பெண்கள், சட்டரீதியாக கணவர்களைப் பிரிந்து மறு மணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கு அரசின் ஆணைகளின்படி பிரிவு 2 பதவிகள் (வரிசை எண் 2.1 முதல் 2.12 வரை குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு" விண்ணப்பித்தால் தரப்படும் என்று உள்ளது. எனினும் ஒரே தேர்வு மையம், அதுவும் நெடுந்தொலைவில் எனும் போது அது பாலின நிகர் நிலை எண்ணமற்றதாக்வே இருக்கிறது.

ஆகவே, எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்குமாறு வேண்டுகிறேன். எனது நியாயமான கவலைகளை ஏற்று உடனடியாக நல்ல முடிவை எடுக்குமாறு வேண்டுகிறேன்'' என இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி