ஆப்நகரம்

இவங்களுக்கு சம்பளத்தை கட் பண்ணா போதும்... லாக்டவுன் தானா முடிவுக்கு வந்திடும்!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இனி ஊரடங்கு நீட்டிக்கப்படக்கூடாது என்பதை மையக்கருத்தாக கொண்டும், ஊரடங்கை நீட்டிக்க நிபுணர் குழு இனி பரிந்துரைக்காமல் இருக்கவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விதத்தில் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Aug 2020, 9:16 am
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதத்துக்கு (ஆகஸ்ட் 31 வரை) நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
Samayam Tamil tamilnadu cm


ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு என்ற முதல்வரின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பால் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களை விவரிக்கும் உணர்வுபூர்வமான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது அதிக லைக்குகளுடன் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்தப் பதிவு, சமயம் தமிழ் வாசகர்களின் பார்வைக்கு இதோ....

தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படும் என்ற தங்களின் அறிவிப்பு, தமிழகத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருக்கிறது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தங்களுக்கு ஆலோசனை கூறுவோர் மிகப்பெரிய மருத்துவ வல்லுனர்களும், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே.

உயர்தட்டு வர்க்கமான இவர்களுக்கு ஏழைகளின் இன்றைய நிலையும், சிறு, குறு தொழிலில் இருப்போரின் வேதனையும் தெரியாது. எனவே, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக நீங்கள் மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்களின் கூட்டத்தையாவது கூட்டி நிலைமையை அவர்களிடம் கேட்டிருக்கலாம்.

அவர்களாவது இன்று இனோவா காரில் போனாலும், ஒருகாலத்தில் பாதிப்பேர் வறுமையில் இருந்திருப்பர். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வாக்கிற்காக ஏழைகளை சந்திக்க இருப்பவர்கள். அவர்கள் மக்களின் மனநிலையை கண்டிப்பாக உங்களுக்கு தெளிவுப்படுத்தி இருப்பர்.

ஊரடங்கை ஆதரிப்போர் யார் தெரியுமா? இடியோ, மழையோ, குளிரோ, வெயிலோ டானென்று ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கும் நபர்களே! இல்லையேல் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி செலவழிப்பது என்று தெரியாது தவிக்கும் செல்வந்தவர்கள்! மற்றவர்கள் யாருமே ஊரடங்கை ஆதரிக்கவும் இல்லை; கொரோனா ஒரு நோய் என்று எண்ணி பயப்படவும் இல்லை!

உங்களுக்கு ஆலோசனை கொடுத்த மேதாவிகள் மதுக்கடையினால் கொரோனா பரவும் என்று சொல்ல மறந்தார்களோ?

ஞாயிறு முழு ஊரடங்கு என்றால் சனிக்கிழமை கடைகளில் கூட்டம் இருமடங்கு இருக்கும் என்பதை சொல்லவில்லையோ?

பாவம் அவர்கள் எங்கே கடைக்கு போயிருப்பார்கள்? அவர்களது வேலையாட்கள் அல்லவோ வரிசையில் அல்லது கூட்டத்தில் நின்றிருப்பார்கள்!

சோப்போ, சீப்போ, கண்ணாடியோ, கற்கண்டோ சென்னையில் பொருளை உற்பத்தி செய்பவன், நாடு முழுவதுமல்லவோ பொருளை விற்று பணம் வாங்க வேண்டும்?

இ பாஸ் எடுத்து அடுத்த மாவட்டத்திற்குள் செல்ல இயலுமா? மத்திய அரசே இபாஸ் வேண்டாம் என்ற நிலையில், தமிழகத்தில் இபாஸ் வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை கூறியவர்கள், நீங்கள் அடுத்த தேர்தலில் ஜெயிக்கக்கூடாது என்று நினைக்கும் உங்களது பகைவர்கள்!

ஒரே காரில் நால்வர் செல்ல தடை! ஆனால் அதே குடும்பம் ஒரே வீட்டில்தானே தங்குகிறார்கள்? பதினைந்து மணிநேரம் திறந்திருக்கும் கடை எட்டு மணிநேரம் மட்டுமே திறந்தால் கூட்டம் அதிகரிக்கதானே செய்யும்?

ஒரு ராஜதந்திர நகர்வை நீங்கள் எடுங்கள்; அப்புறம் வேடிக்கையை பாருங்கள்! ஊரடங்கு முடியும்வரை அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாதிச் சம்பளம் என்று அறிவித்துப் பாருங்கள்! உடனே ஊரடங்கே வேண்டாம் என்ற பரிந்துரை உங்கள் மேஜையில் இருக்கும்.

கலைஞரோ,எம்ஜிஆரோ,ஜெயலலிதாவோ இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பர்; மக்களின் பாராட்டையும் பெற்றிருப்பர்! தாங்களும் அவர்களை பின்பற்றுங்கள்! என்று விரிவான அந்தப் பதிவில் முதல்வருக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி