ஆப்நகரம்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவீங்களா? தமிழக அரசு மீது கடுப்பான உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் எண்ணம் இருக்கிறதா என்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 12:22 pm
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் உள்ளாட்சிக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி நிறைவு பெற்றது.
Samayam Tamil SC


இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளி போடப்பட்டு வந்தது. எனவே உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் மட்டும் நியமிக்கப்பட்டனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு சரவர பின்பற்றப்பட வில்லை என்று நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், தமிழக அரசும், தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றன. மேலும் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டி இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு கால அவகாசம் கேட்டது.

இதனால் கடுப்பான உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை விரைவாக தேர்தலை நடத்த உத்தரவிட்டன. இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் இருப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முடியவில்லை என்று பதிலளித்தது. இதையடுத்து எப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும். இதுகுறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி