ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் வழக்கு மீது செப்.,30இல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு மீது வருகிற 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது

Samayam Tamil 27 Sep 2022, 12:12 pm
அதிமுக பொதுக்குழு நடத்தியதை அங்கீகரித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்


சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களையும் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓசி என்றால் என்ன? இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது?
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு நடத்தியதை அங்கீகரித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி