ஆப்நகரம்

தூய்மை நகரங்கள் பட்டியல்: டாப்-50ல் திருச்சி, கோவை, ஈரோடு, கும்பகோணத்திற்கு இடம்

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் டாப்-50 இடங்களில் தமிழகத்தின் திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

TOI Contributor 4 May 2017, 2:32 pm
மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் டாப்-50 இடங்களில் தமிழகத்தின் திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
Samayam Tamil swachh rankings indore bhopal cleanest cities
தூய்மை நகரங்கள் பட்டியல்: டாப்-50ல் திருச்சி, கோவை, ஈரோடு, கும்பகோணத்திற்கு இடம்


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான சிறந்த தூய்மையான நகரமாக, ‘இந்தூர்’ தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேசத்தின் ’கொண்டா’ நகரம், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி, இதை விளம்பரப்படுத்த அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தூதர்களாகவும் நியமித்தார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாநில அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றும் நகரங்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், இந்தாண்டு சுத்தமான நகரமாக, மத்தியப்பிரதேச மாநிலத்தின் ‘இந்தூர்’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், ’டாப்-10’ நகரங்களுள் தமிழகத்தின் ‘திருச்சி’ நகரம் 6வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல், டாப் 50 இடங்களுக்குள் தமிழகத்தின் மற்ற 3 நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

கோவை நகரம் 16 வது இடத்திலும், கும்பகோணம் 37வது இடத்திலும் மற்றும் ஈரோடு 42வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரம் இந்த ஆண்டு 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி