ஆப்நகரம்

விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் பாராதிராஜா தலைமையில் முதல்வருடன் சந்திப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் பாரதிராஜா முதல்வரை சந்தித்து பேசினர்.

Samayam Tamil 20 Dec 2018, 3:45 pm
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னும் 4 மாதத்தில் முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன்,எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 10 பேர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்
Samayam Tamil தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு


அதை தொடர்ந்து அவர்கள் வெளியே செய்தியாளர் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரத்தை விஷாலுக்கு யார் வழங்கியது. தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பேசினார்.


அதை தொடர்ந்து பேசிய நடிகர் ஜே.கே. ரித்தீஷ், விஷால் தவறு செய்துள்ளார்.40 ஆண்டுகளாக சேமித்து வைத்த 8 கோடியை அவர் செலவு செய்துவிட்டார்.விஷால் கோபப்பட வேண்டிய தேவை இல்லை. விஷால் தன்னை நல்லவனாக ஊடகங்கள் முன்பு காண்பிக்க முயற்சி செய்கிறார். இளையராஜா 50 கோடி ரூபாய் வரை சங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலையில், அவருக்கு மூன்றரை கோடி கொடுத்து எதற்காக நிகழ்ச்சி நடத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதியை அறிவிக்காமல் அதனை தவிர்ப்பதற்காக இளையராஜாவிற்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று கூறினார்.

இதற்கிடையில் தமிழக தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தயாரிப்பாளர் சங்க விவகாரம் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னைக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று தெரிவித்தார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் விவகாரம் தொடர்பாக, முதல்வர் புதிய முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி