ஆப்நகரம்

டார்கெட் தமிழ்நாடு... பாஜகவின் ஜனவரி 2023 பிளான்... வருகிறது டபுள் டமாக்கா வியூகம்!

வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் இரண்டு விஷயங்களை தமிழக பாஜக கையிலெடுக்க உள்ளதாக தெரிகிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 28 Nov 2022, 12:10 pm
ஒற்றை தலைமைக்கான மோதல், கட்சியின் விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான சலசலப்பு, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டம் என அதிமுக கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தமிழக பாஜக, எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க மும்முரம் காட்டி வருகிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சென்னை வருகையின் போது கமலாலயத்தில் பேசிய விஷயம் மிகுந்த கவனம் பெற்றது.
Samayam Tamil tamil nadu bjp strategy for 2024 lok sabha elections with 10 constituencies and padayatra plan
டார்கெட் தமிழ்நாடு... பாஜகவின் ஜனவரி 2023 பிளான்... வருகிறது டபுள் டமாக்கா வியூகம்!


தமிழக அரசியலில் வெற்றிடம்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் பெரும் வெற்றிடத்தை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி குடும்ப ஆட்சியை செயல்படுத்தும் திமுக, பலவீனமாக காட்சியளிக்கும் அதிமுக என திராவிட கட்சிகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதுதான் சரியான வாய்ப்பு. பாஜகவை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்துங்கள். இதற்கு தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மேற்கொண்ட செயல்பாடுகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மோடி அலை

மக்கள் மனங்களை வெல்ல வியூகம் வகுத்து செயல்படுங்கள். தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல ஆதரவு அலை இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் பல்வேறு நன்மைகளை பெற்று வருகின்றனர். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் மோடியின் செயல்பாடுகள் இருக்கின்றன. எனவே தமிழகத்தில் பாஜக சிறப்பான வளர்ச்சியை பெறும்.


தேதி குறிச்ச டெல்லி... வரும் ஜனவரி 17 அதிமுகவில் நடக்கப் போகும் மாற்றம்!

இரண்டு முக்கிய திட்டங்கள்

அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறியுள்ளார். தற்போது ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்களில் மத்திய பாஜக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. அவை முடிந்ததும் தமிழகத்தில் கவனம் செலுத்துவர் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் 2024 மக்களவை தேர்தலுக்காக இரண்டு முக்கியமான திட்டங்களை பாஜக வைத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

10 தொகுதிகளுக்கு குறி

ஒன்று, 10 மக்களவை தொகுதிகளை குறிவைத்து செயல்படுவது. அதில் சென்னை தெற்கு, கோயம்புத்தூர், ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்டவை அடங்கும். இங்கெல்லாம் வாக்குகளை பாஜக பக்கம் கவர தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதையொட்டியே மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழகம் வருகை புரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

’வேல் யாத்திரை’ பார்முலா

மேலும் உரிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு அடிமட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். இரண்டாவது, பாதயாத்திரை மேற்கொள்வது. இந்த விஷயத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே ஈர்ப்பு உண்டு. முன்னதாக எல்.முருகன் மாநில பாஜக தலைவராக இருந்த போது வேல் யாத்திரையை கையிலெடுத்து சலசலப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.


அதிமுகவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் பலவீனப்படுத்திவிட்டார்கள் - டிடிவி டமால்

களமிறங்கும் அண்ணாமலை

அந்த வகையில் குறிப்பிட்ட வழித்தடங்களை தேர்வு செய்து வரும் ஜனவரி 2023 முதல் மாநிலம் தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அமித் ஷாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே ஆட்சி என்ற திட்டத்திற்கு அண்ணாமலை அச்சாரம் போடுவார் எனக் கூறப்படுகிறது.

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்

இந்த சூழலில் ’இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் தொடங்கி வைத்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 24 லட்சம் வீடுகளுக்கு சென்று கட்சியினர் பாஜகவிற்கு ஆதரவு திரட்டவுள்ளனர். வரும் 2024 மக்களவை தேர்தல் அண்ணாமலைக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்பதால் தீவிர களப்பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி