ஆப்நகரம்

டேங்கர் லாரிகள் கம்மியாக இருக்கின்றன; குடிநீர் விநியோகத்தில் சிக்கல்- தமிழக முதல்வர்!

தலைநகர் சென்னையில் தன்ணீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் லாரிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. இருப்பினும் முடிந்தவரை தண்ணீர் வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jun 2019, 5:48 pm
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட, மிக குறைந்த அளவே பெய்துள்ளது.
Samayam Tamil Edappadi Palaniswami


கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சென்னைக்கு நீர் தரும் ஏரிகளில் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டிய நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் இருக்கின்றன. சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரும் போதிய அளவு கிடைக்கவில்லை.

12 டி.எம்.சிக்கு பதில், வெறும் 2 டி.எம்.சி தான் கிடைத்தது. கண்டலேறு அணையில் வெறும் 4.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

எனவே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம், ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. குவாரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 200 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது.

தமிழகத்திற்கு ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி. தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா என்று கேட்டு அவருக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளோம்.

எனது வீடு மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுவது வழக்கமான செயல் தான். ஆனால் என்னுடைய வீட்டிற்கு லாரிகள் மூலம் அதிகப்படியான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக செய்திகள் பரப்புவது தவறானது.

தண்ணீர் டேங்கர் லாரிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இயங்கி வருகின்றன. எனவே அவற்றை மட்டுமே தண்ணீர் விநியோகத்திற்கு பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

ஒரு அபார்ட்மெண்டில் 10 லாரிகளில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்தால் என்ன செய்வது? அடுத்த 4 மாதங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விநியோகம் செய்து வருகிறோம்.

நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எவ்வளவு நீர் தரப்படுமோ, அதை நிச்சயம் விநியோகம் செய்து வருகிறோம். தண்ணீர் லாரிகளுக்கு இவ்வளவு தான் கட்டணம் தான் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அதிக பணம் தருகின்றனர்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். தற்போது குடியரசுத் தலைவர் உரையில் அந்த திட்டம் இடம்பெற்றுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீரையே பெரிதும் நம்பி இருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டதை 152 அடியாக உயர்த்தும் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி