ஆப்நகரம்

தத்தளிக்கும் 721 தமிழக மீனவர்கள்; ஈரானில் தொடர்ந்து படகில் வசிக்கும் சோகம்!

கடந்த 16 நாட்களாக தமிழக மீனவர்கள் படகிலேயே வாழ்ந்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Mar 2020, 10:04 am
ஈரான் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 721 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான வழி கிடைக்காததால் ஈரானின் கீஸ் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Fishermen


இந்நிலையில் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் மீனவர்களை மீட்டுத் தருமாறு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக கடலோர வளர்ச்சி மன்றத்தைச் சேர்ந்த தாரகை கத்பட் கூறுகையில், எங்கள் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டுப் பகுதிகளில் உள்ள தீவுகளில் தவித்து வருகின்றனர்.

தமிழக மீனவர்களை சந்திக்கச் சென்ற தூதரக அதிகாரிகள் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் பணம் ஏதுமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஈரானில் படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்கள், கரைப் பகுதிகளில் இருந்தவர்களை அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் மீனவர்களை கண்டு கொள்ளவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை தமிழக அரசு கண்டு கொள்ளாத சூழல் தான் நிலவுகிறது. ஏனெனில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ, எம்.பிக்களாக இருப்பது தான் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.

சார் லீவு கொடுங்க; கொரோனா அறிகுறி இருக்கு - மிரண்டு போன ஆசிரியர் - அடுத்து நடந்த பரபரப்பு!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களை மீட்டுக் கொண்டு வர கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈரான் நாடு கொரோனா வைரஸால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் 16 நாட்களாக தமிழக மீனவர்கள் படகிலேயே வசித்து வருகின்றனர். எனவே மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி