ஆப்நகரம்

தமிழகத்தில் ஊரடங்கா, தளர்வுகள் நீட்டிப்பா; வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அன்லாக் 3.0 தளர்வுகள் அமலில் இருக்கும் சூழலில், தமிழகத்தில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 30 Aug 2020, 8:46 am
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் LOCKDOWN உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் போதிய சரீர இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை சுகாதாரம் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் UNLOCK உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது நாடு முழுவதும் UNLOCK 3.0 உத்தரவு அமலில் இருக்கிறது. இது நாளையுடன்(ஆகஸ்ட் 31) முடிவடைகிறது. இந்த சூழலில் UNLOCK 4.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
Samayam Tamil Edappadi Palaniswami


அதன்படி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அரசின் உத்தரவு இதுதான்!

இந்தக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்குவதா? முழுவதுமாக ரத்து செய்வதா? என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வந்த பொதுப் போக்குவரத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததாக சுட்டிக் காட்டப்பட்டது.

எனவே மாவட்டங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்க அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 4,15,590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,55,727 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அரசு!

அதேசமயம் 7,137 பேர் பலியாகியுள்ளனர். 52,726 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 46.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் UNLOCK 4.0 தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறையுடன் பொதுப் போக்குவரத்தையும் தொடங்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி