ஆப்நகரம்

இந்த பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து- தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சிறப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான ”தமிழ் மறவன்”, தமிழ்நாடு அரசின் மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.

Samayam Tamil 30 Jun 2019, 5:42 pm
தமிழ்நாட்டிற்கு அடையாளங்கள் என சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, விலங்கு - வரையாடு, பறவை - மரகதப் புறா, மலர் - காந்தள், மரம் - பனை மரம் உள்ளிட்டவை ஆகும்.
Samayam Tamil TN Butterfly


இந்த வரிசையில் தற்போது மாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்” இணைந்துள்ளது. இதற்கு போர் வீரன் என்று பொருள்படும். இது டார்க் ப்ரவுன் நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை முதன்மையாகப் பெற்றுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று. ஒரு சில இடங்களில் மட்டுமே வசிக்கக்கூடிய இந்த பட்டாம்பூச்சி, கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும்.

இதற்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, வனப்பகுதி மற்றும் வனவிலங்கு தோட்டத்துறையின் தலைமை பாதுகாவலர் மாநில அரசிற்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, மாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்”-ஐ தமிழ்நாடு அரசு மாநில அந்தஸ்து அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இறுதிச்சுற்றுக்கு தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தனர். இவை இரண்டும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டுள்ளன.
இதில் ஏராளமான சிறப்புகள் கொண்ட “தமிழ் மறவன்” இனத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அளவிலான அங்கீகரிக்கும் 5வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

முன்னதாக மகாராஷ்டிரா(ப்ளூ மோர்மன்), உத்தரகாண்ட்(காமன் பீகாக்), கர்நாடகா(சதர்ன் பேர்டு விங்ஸ்), கேரளா(மலபார் பேண்டட் பீகாக்) ஆகியவை பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து அளித்துள்ளன.

அடுத்த செய்தி