ஆப்நகரம்

புலம்பெயர் தொழிலாளார்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசு சாடியுள்ளது

Samayam Tamil 27 May 2020, 1:57 pm
கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று நாடு முழுவதையும் முடக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதையடுத்து, அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற இயக்கங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால், விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த புலம் பெயர் தொழிலாளார்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர்.
Samayam Tamil உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை


பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால், அன்றாட ஊதியம், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கடுமையான நடை பயணங்களை மேற்கொள்கின்றனர். அதில், பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை நடந்த சாலை விபத்துகளில் 196 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்லத் தடை விதித்த மத்திய அரசு அவர்களுக்குத் தங்குமிடம், உணவுகளை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கொளுத்தி போட்ட ராகுல்; சிதறுமா MVA கூட்டணி - சூடுபிடிக்கும் மகாராஷ்டிர அரசியல்!

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என கண்டனம் தெரிவித்ததுடன், புலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாளும் நிலை வெட்கமாக உள்ளது எனவும் சாடியுள்ளது.

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, பொது முடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்சினை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உருவானது மத்திய, மாநில அரசுகளின் தோல்வி என கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களது நலனுக்கான, சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 28ஆம் தேதிக்கும் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி