ஆப்நகரம்

ஆடியோ+ சர்ச்சை.. அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பெயரா..? அதிரடியாக சொன்ன ஸ்டாலின்.. என்னவாம்..?

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 2 May 2023, 9:39 am
சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் நிலையில், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என சில ஊடங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனது எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Samayam Tamil 02 -stalin


தமிழக அரசியலில் இன்றைய சூழலில் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது பிடிஆர் ஆடியோ விவகாரம் தான். நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அரசியல் களத்தில் ஒரு புயலையே ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் தனது மூதாதையர்களை விட கடந்த 2 ஆண்டுகளில் அதிகமாக சம்பாதித்துவிட்டதாகவும், சுமார் ரூ.30,000 கோடி வரை உள்ள அந்தத் தொகையை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் அவர்கள் திணறி வருவதாகவும் பிடிஆர் பேசியது போல அந்த ஆடியோவில் குரல் பதிவாகி இருந்தது.

அதேபோல, இரண்டாவதாக வெளியான ஆடியோவில், பிடிஆர் பாஜகவை புகழ்வதை போலவும், திமுகவை விமர்சிக்கும் வகையிலும் பேசியது போல குரல் பதிவு இருந்தது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இந்த ஆடியோ விவகாரம் அரசியல் களத்தையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இது, திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், இந்த ஆடியோக்கள் போலியாக ஜோடிக்கப்பட்டவை என பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை, ஆடியோ போலியாக இருந்தால் போலீஸில் கேஸ் கொடுங்கள்.. ஒரிஜினல் ஆடியோவையே நாங்கள் சமர்ப்பிக்கிறோம் எனக் கூறி இருந்தார். அண்ணாமலை இவ்வளவு கூறியபோதிலும், பிடிஆர் தரப்பில் இருந்து இதுதொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இதுவும் திமுக தலைமைக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. இதுபோன்ற சூழலில்தான், முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று பிடிஆர் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, பிடிஆர் ராஜினாமா செய்யப்போவதாகவும், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் சில ஊடங்களில் செய்திகள் வெளியாகின.
"கிங்மேக்கர்".. கர்நாடகாவே அதிரும் ஒற்றை பெயர்.. பாஜகவின் நிஜ "பெருமாள் பிச்சை".. யார் இந்த பி.எல். சந்தோஷ்?
இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "இந்த ஆடியோ தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளித்துவிட்டார். இது ஒரு மட்டமான அரசியல். இந்த மட்டமான அரசியலை செய்வோருக்கு விளம்பரம் தேடி தர நான் விரும்பவில்லை. மக்கள் பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சை வைத்து பார்க்கும் போது பிடிஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது தெளிவாகிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது அமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்பது உறுதியாகி இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி