ஆப்நகரம்

Gaja Cyclone: தென்னை மரங்கள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு!

கஜா புயலுக்கு, தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Samayam Tamil 23 Nov 2018, 12:01 pm
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில், கஜா புயலுக்கு ஒரு ஏக்கர் அளவிலான தென்னைமரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்ததால், மனமுடைந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Gaja Cyclone: தென்னை மரங்கள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு!
Gaja Cyclone: தென்னை மரங்கள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு!


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி (52). இவரது மனைவி குணமதி. இவர்களுக்கு பாரதி என்ற மகளும், ஆனந்த், கார்த்தி என்ற இரு மகன்களும் உள்ளனர்.

சமீபத்தில் தாக்கிய கஜா புயலில், விவசாயி சிவாஜியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து அவர் அருகில் உள்ள தன் தம்பியின் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அத்துடன் அவரது ஒரு ஏக்கர் தென்னை மரங்களும் வேருடன் சாய்ந்தது.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த சிவாஜி, நேற்று மாலை தனது தென்னந்தோப்பை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, யாரிடமும் பேசாமல் இருந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவாஜியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே, ஒரத்தநாடு சோழகன்குடிக்காடு கிராமத்தில் கஜா புயலால் தனது 5 ஏக்கர் நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததில், சுந்தர்ராஜ்(57) என்ற விவசாயி மனமுடைந்து, நேற்று தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி